தமிழறிஞர் - இளங்குமரனார் பற்றிய சிறு குறிப்பு
(Tamizharinchar Ilangumaranar Important Notes in Tamil)
பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார்.
பிறப்பு - Jan 30, 1927 - திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம்.
தந்தை - படிக்கராமர் என்னும் இராமர்
தாய் - வாழவந்தம்மையார்.
1946 - திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார்.
1951 - சென்னை பல்கலைக்கழகத்தில் புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1958 - இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.
1963 - இவர் எழுதிய ‘திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார்.
2003 - 'சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ எனும் நூலை முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார்.
500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியள்ளார் (திருக்குறள் ஆய்வுநூல்கள் மட்டுமே 89 ஆகும்)
படைப்புகள் சில:
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, , தமிழர் வாழ்வியல் இலக்கணம், குண்டலகேசி, தொல்காப்பியப் பதிப்பு, தமிழ்வளம், தேவநேயம், மறைமலையம், திரு.வி.க வின் தமிழ்க்கொடை, செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம், திருக்குறள் வாழ்வியலுரை
தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.
எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர்.
கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைபடக்கூடாது என்பதற்காக கண்களை மூடியெழுதிப் பழகியவர்.
திருக்குறளுக்கு உரையை திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்தியவர்.
உலகில் முதன்முதலாகப் பெண்ணொருத்தியால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை - அது மறைந்துவிட்டது என்று தமிழறிவுலகம் கருதியவேளையில், அதனை கண்டெடுத்து தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியவர்.
இவர் எழுதிய ‘பாரி’ என்னும் ஆய்வுக்கட்டுரையைப் படித்த பாவாணர், “நுங்கள் “பாரி”யைப் பார்த்தேன்; முற்றும் சரிதான்;.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற்பிறப்பு அமைப்பீர்கள்’ எனப் பாராட்டியுள்ளார்.
இவரைப் பற்றி "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ஒரு புல் (தன் வரலாறு)’ என்னும் தலைப்பில் தம் வரலாற்று நூலை இரண்டு தொகுதிகளாக 2017-ஆம் ஆண்டுவரை எழுதியுள்ளார்.
திருச்சிக்கு அருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவினார். அங்கு, ‘பாவாணர் நூலகம்’ என்ற பெயரில் 17000 நூல்களுடன் அவர் எழுதிய நூல்களையும் தொகுத்து வைத்துள்ளார்.
பண்பாட்டுக்குக் காந்தியையும், பொருளியிலுக்குக் காரல் மார்க்சையும், சமூக முன்னேற்றத்துக்குப் பெரியாரையும் பின்பற்றுவதாகக் கூறுவார்.
திரு. வி. க. வை வாழ்வியலுக்கும், மறைமலையடிகளை தனித்தமிழ் உணர்வுக்கும், இலக்குவானரைத் தமிழ்த் தொண்டுக்கும், பாவாணரைச் சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வார்.
2012 - பச்சமுத்து பைந்தமிழ் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்.
** பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியுள்ளது.